செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

ONGC -யின் அலட்சியப்போக்கால் காவிரிப்படுகையில் தொடரும் படுகொலைகள்!

ONGC -யின் அலட்சியப்போக்கால் காவிரிப்படுகையில் தொடரும்

படுகொலைகள்!


                                                                                                    - மு. சிவகுருநாதன்


(திருவாரூர் விளமல் - தியானபுரம் கூட்டுறவு நகரில் எனது வீட்டிற்கு சில மீட்டர் தொலைவில் நடந்த கோர விபத்து குறித்த பதிவு.)


எரிந்த லாரி  மற்றும் அரிசி



உருக்குலைந்த லாரி  மற்றும் அரிசி மூட்டைகள்



உருக்குலைந்த லாரி  மற்றும் அரிசி மூட்டைகள்



குடியிருப்புப்பகுதியில் நடந்த விபத்து



வெட்டப்பட்ட மரம்,பாதிக்கப்பட்ட வீடு

குடியிருப்புப்பகுதியில் நடந்த விபத்து



உடைந்த ONGC குழாய்



புதைக்கப்படாமல் சாலை ஓரத்தில் செல்லும் எரிவாயுக்குழாய்



புதைக்கப்படாமல் சாலை ஓரத்தில் செல்லும் எரிவாயுக்குழாய்



எரிவாயுக்குழாய் அருகே முன்னாள் மாவட்ட ஆட்சியர் திறந்த கல்வெட்டு



கண்ணீர் அஞ்சலி போஸ்டர்



எமது பார்வைகளும் பரிந்துரைகளும்:


          ஜூலை 30, 2011 சனி இரவு திருவாரூர் விளமல் - தியானபுரம் சாலையில் குறிஞ்சி நகருக்கு அருகில் ONGC எண்ணெய் / எரிவாயுக் குழாயில் லாரி மோதி தீப்பற்றி எரிந்ததில் லாரி டிரைவரும் கிளீனரும் தீயில் கருகி இறந்தனர்.   செந்தாமரைச்செல்வி (12) என்ற சிறுமி காயமடைந்தார்.  அரிசி மூட்டைகள் ஏற்றி வந்த அந்த லாரி, அருகில் நின்றிருந்த மினி லாரி, கடை, வீடு, மரங்கள் என அவ்விடத்திலுள்ள அனைத்தும் எரிந்து சாம்பலானது.

           ஊடகங்களும், அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறையும் இதை வெறும் விபத்தாகவே பார்க்கக் கற்றுக் கொண்டுவிட்டன.  அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அலட்சியப் போக்கால் இப்பகுதிகளில் நடைபெறும் இது போன்ற விபத்துக்கள் உண்மையில் படுகொலைகள்தான்.  அரசு நிறுவனமாக ONGC-யின் அலட்சியப் போக்கால் இது போன்ற பல்வேறு விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. ஆனால் இதனைத் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகமோ அல்லது ONGC நிறுவனமோ இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
 

          இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (நவம்பர் 18, 2009) உச்சிமேடு கிராமத்தின் ஆற்றங்கரைத் தோப்பில் காலைக்கடன் கழிக்கச் சென்ற கலியபெருமாள் (35) என்பவர் சிகரெட் பற்ற வைக்க, ONGC எரிவாயுக் குழாயில் ஏற்பட்டிருந்த கசிவால் மூங்கில் காடுகள் நிறைந்த அவ்விடமே பற்றியெரிந்தது.  அங்கு ஏற்கனவே ஒதுங்கியிருந்த குளிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆனந்தராஜ் (14), சேதுபதி (14) உள்ளிட்ட மூவர் பலத்த காயமடைந்து பின்னர் இவர்களில் ஒரு மாணவர் உள்பட இருவர் மரணடைந்தது சோகமான நிகழ்வு.   

        இதற்குப் பின்னால் மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் ONGC நிர்வாகத்தை அழைத்துப் பேசி இனிமேல் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமலிருக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

           ஆனால் எதுவும் நடைபெறவில்லை என்பதே நடைமுறை யதார்த்தம்.  புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவனொருவன் ONGC எண்ணெய் கிணறு அமைந்த இடத்தில் உள்ள எந்திரத்தில் சிக்கி தனது உறுப்புகளை இழந்தது தனிக்கதை.  இதைப் போல எண்ணிலடங்கா விபத்துக்கள் (!?) ஏராளம்.

           இந்த மாதிரி அடிக்கடி விபத்து நடைபெறும் போதெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் வானவில் குடியிருப்போர் நலச் சங்கத்திற்கு 15.09.2008 அன்று அடிக்கல் நாட்டிய  கல்வெட்டு ஒன்று இருக்கிறது.  இக்கல்வெட்டுக்கு அருகிலேயே இந்த எரிவாயு / எண்ணெய்க் குழாய் சாலையோரத்தில் புதைக்கப்படாமல் செல்கிறது.  இக்குழாய்களை மண்ணில் புதைத்து எடுத்துச் செல்வதற்கு ONGC  நிர்வாகத்திற்கு வக்கில்லை.  அதைச் செய்யச் சொல்வதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கும் துப்பில்லை.  இக்குழாய் மீதுதான் விபத்துக்குள்ளான லாரி மோதி தீ விபத்துக்குள்ளாகி இரு உயிர்களை பலி கொண்டிருக்கிறது.

          தமிழக அரசுக்குச் சொந்தமான திருவாரூர் நவீன அரிசி ஆலையிலிருந்து தூத்துக்குடிக்குச் செல்ல அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்ட லாரியின் ஓட்டுநர் ரயில் (எ) கலையரசன் (32) ஒக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.   லாரியின் கிளீனர் எலி (எ) பாலமுருகன் (22) கோயில் கண்ணாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்.  சரக்குடன் இந்த லாரி தியானபுரம் சாலையில் உள்ள மேமங்கலம் என்ற கிராமத்திலுள்ள டிரைவர் வீட்டிற்க வந்த போது சாலையோரத்தில் எவ்வித பாதுகாப்பும் இன்றிச் செல்லும் எண்ணெய் / எரி வாயுக்குழாய் மீதேறியதால் குழாய் வெடித்து தீப்பற்றியதால் இவ்விபத்து நடந்துள்ளது.


          பல டன் சரக்குகளை ஏற்றிய இந்த லாரி மிகவும் குறுகலான தியானபுரம் சாலையில் இருக்கும் வீட்டிற்கு ஓட்டி வந்தது மாபெரும் தவறு.   தீயை அணைக்க மேலும் கால தாமதம் ஆகியிருந்தாலோ காற்று பலமாக வீசியிருந்தலோ பக்கத்திலுள்ள குடிசை வீடுகள், மாடி வீடுகள் என எதுவும் விபத்திலிருந்து தப்பியிருக்க முடியாது.


          இந்தியாவில் அரசு, தனியார் நிறுவனங்கள், குடி மக்கள் என எந்தத் தரப்பும் சட்டங்கள், விதிகள் என எவற்றையும் மதித்துச் செயல்படுவதில்லை என்பதுதான் நடைமுறை உண்மை.  இந்த கேவலமான சூழலில் நிலத்தின் அடியில் எரிவாயு / எண்ணெய் போன்றவற்றை கொண்டு செல்ல அனுமதித்ததே தவறு.  மேலை நாடுகளைப் போல நாமும் செயல்படுவதாக நினைத்துக் கொண்டு குடிமக்களை கொலை செய்யும் வேலைகளை அரசாங்கங்கள் திறம்பட செய்து வருகின்றன.  


              மெட்ரோ ரயில், மோனோ ரயில், அதிவேக ரயில் என்றெல்லாம் பேசுபவர்கள் ஒரே பாதையில் எதிரெதிரே இரு ரயில்கள் ஒரே நேரத்தில் இயக்குவது, ஸ்டே­னில் ஓட்டுநர் இறங்கி நிற்கும் போது யார் வேண்டுமானாலும் தொடர் வண்டியை இயக்குவது போன்ற நிகழ்வுகளை எப்போது கட்டுப்படுத்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

           சுகாதாரத் துறை நாட்டு மக்களை சோதனை எலிகளாகப் பயன்படுத்துவதைப் போல அரசின் அனைத்துத் துறைகளும் அவர்களுடன் சேர்ந்து தனியார் துறைகளும் குடிமக்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத பல்வேறு காரியங்களில் ஈடுபடுகின்றன.  அதில் இதுவும் ஒன்று.

 

          ஒரு தொழிற்சாலை அல்லது நிறுவனம் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், சுற்றுச் சூழல் மாசடையாமலிருக்க செய்ய வேண்டிய சுத்திகரிப்புப் பணிகள் போன்றவற்றை அரசு நடைமுறைப்படுத்துவதை  உறுதி செய்ய வேண்டும்.  ஆனால் இங்கு நடப்பது என்ன?  திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுப் பிரச்சினையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் உத்தரவிட்ட பிறகும் அதை அமல் செய்யாமல் தனியார் முதலாளிகளுக்காக மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு கழிவு சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கத் திட்டமிடும் அரசிடம் இதையெல்லாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

           மத்திய அரசு நிறுவனமாக ONGC   காவிரிப்படுகையின் பல்வேறு இடங்களில் எண்ணெய் துரப்பணப் பணிகள் மேற்கொண்டு பெட்ரோலியம், எரி வாயு போன்றவற்றை பூமியிலிருந்து எடுக்கிறது.  இந்நிறுவனத்திற்கு நிலக் கொள்ளை செய்வதற்கு மட்டும் தனி வட்டாட்சியர்களை நியமித்து துரித நடவடிக்கை எடுக்கும் மாநில அரசு இவற்றால் மக்கள் அடையும் பாதிப்புகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறது.

           நிலத்திற்கு அடியில் குழாய் மூலம் எரிவாயு / எண்ணெய் ஆகியவற்றை பிறிதோரிடத்திற்கு கொண்டு செல்வதாகக் கூறிக்கொண்டு சாலையோரத்தின் மேற்பரப்பில் குழாய்கள் மூலம் கொண்டு செல்வது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்.  எவ்வித பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கைகள் இன்றி பெருவாரியாக மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் வழியாக இத்தகைய அபாயகரமான குழாய்கள் செல்வது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

           இந்தக் குழாய்கள்களை புதைக்காமல் சாலையின் மேற்பரப்பில் கொண்டு செல்ல அனுமதித்த ONGC  நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

           இந்நிறுவனம் பல்வேறு இடங்களில் இயற்கை எரிவாயுவை எரிய விடுகின்றது.  இதனால் இப்பகுதியின் வளி மண்டல வெப்பநிலை கணிசமாக உயர்கிறது.  எனவே பல ஆண்டுகளாக இப்பகுதிகளில் பெய்ய வேண்டிய சராசரி மழையளவு பெரிதும் பாதிக்கப்படுகிறது.  இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உரிய ஆய்வுகள் நடத்தி அதன் முடிவுகளை வெளியிட வேண்டும்.  அதன்படி ONGC  நிறுவனத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

           சுற்றுச்சூழல் சீர்கேட்டில் ஈடுபடும் நிறுவனங்கள் மத்திய, மாநில மற்றும் தனியார் என்று யாருடையதாக இருப்பினும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குடிமக்கள் உயிருக்கு உத்தரவாதமளிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

           இவ்விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.  சேதமடைந்த சொத்துக்களுக்கு தகுந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும்.  குறுகலான சிறிய சாலைகளில் பெரிய கனரக வாகனப் போக்குவரத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.

          தியானபுரம் சாலை எழில் நகரில் பாரத ஸ்டேட் வங்கியின் விளமல் கிளை உள்ளது.  இதன் எதிரே மாவட்ட சுகாதாரப் பணிகள் (இணை இயக்குநர்) அலுவலகம் (Deputy Director of Public Health)  உள்ளது.  இதனால் அதிகமாக வாகனங்கள் இங்கு குவிக்கப்பட்டு அவ்வழியே நடந்து செல்வதற்குக் கூட முடியாத சூழல் உள்ளது.

           திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய இடத்திற்கு மாற்றப்பட்ட பிறகு பழைய மருத்துவமனைக் கட்டிடங்கள் வெறுமனே கிடக்கின்றன. திருவாரூரில் வாடகையில் இயங்கும் பல்வேறு அரசுத் துறைகளை இங்கு இடம் மாற்றம் செய்யலாம்.  இந்த வாய்ப்புகள் இருந்தும் சுகாதாரத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தை குடியிருப்புப்பகுதியில் நெரிசலான இடத்தில் வைத்துக் கொண்டு அப்பகுதி பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.  உடனடியாக இந்த அலுவலகத்தை பழைய மருத்துவமனை கட்டிடங்களுக்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும்.

           விபத்து நடந்தவுடன் அங்கிருந்த ஒரு பெரிய தூங்குமூஞ்சி மரம் வெட்டப்பட்டுள்ளது.  இதை ஏன் வெட்டினார்கள் என்பது தெரியவில்லை.  தீ விபத்தில் இலைகள் - கிளைகள் கருகிப் போனாலும் மீண்டும் துளிர்க்க வாய்ப்பிருந்தும் சமூக விரோதிகளால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தப்பட்டு அம்மரம் வெட்டி துண்டு துண்டாக்கப்பட்டுள்ளது.   அவசரமாக இந்த மரத்தை வெட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


          இந்நிகழ்வு நடைபெற்று மூன்று நாட்கள் ஆன பிறகும் கூட 01.08.2011 திங்கள் வரை எரிந்து போன இரு வாகனங்களை அப்புறப்படுத்துதல்,  சாலையில் எரிந்தும் எரியாமலும் சிதறிக் கிடக்கின்ற அரிசியை வேறிடத்திற்கு மாற்றுதல் போன்ற எவ்வித பணிகளும் நடைபெறாத நிலையில் பெரிய மரம் மட்டும் அறுத்துச் சாய்க்கப்பட்டுள்ளது.


       01.08.2011 அன்று இரவு விபத்துக்குள்ளான லாரி மற்றும் அரிசியிலிருந்து புகை வெளியானதை அடுத்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் இப்பதிவு வெளியாகும் வரை லாரி மற்றும் அரிசியை அப்புறப்படுத்தும் பணி தொடங்கப்படவேயில்லை.

          வாகன ஓட்டிகளின் கவனக் குறைவு, அரசு, பொது மற்றும் தனியார் துறைகளின் அலட்சியப் போக்கால் இது போன்ற விபத்துகள் தொடர்கதையாகியுள்ளன.   இனியும் வேடிக்கை பார்க்காமல் பொறுப்பான நடவடிக்கைகளில் இறங்க வேண்டியதும் தொடர்புடைய அனைவரின் கடமையும் பொறுப்புமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக